சென்னை: தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அதிமுக ஆட்சிக்காலத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனம் செய்யப்பட்டார். அவரது மூன்று ஆண்டு பதவிக் காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் பூர்ணலிங்கம் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து கடந்த 3ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இறுதி நாள் நிலவரப்படி 37 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போதைய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர். விண்ணப்பித்த அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல மருத்துவர்கள் என்பதும், வேறு மாநிலங்களைச் சேர்ந்த யாரும் விண்ணப்பம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த 37 பேரிலிருந்து மூன்று பேர் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் தேடுதல் குழு வழங்க உள்ளது. அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
இதையும் படிங்க:நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்