தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக 10 ஆண்டுகள் பதவி வகித்த எம்ஜிஆர் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேரு சிலை திறப்பு விழா நடந்து முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, (அதாவது 24.12.1987 மாலை 5 மணிக்கு) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெறுவதாக இருந்தது. ஆளுநர் குரானா தலைமையில் குடியரசு தலைவர் ஆர்.வெங்கடராமன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தை தொடங்கி வைக்க இருந்தார்.
டிசம்பர் 23ஆம் தேதி இரவில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் எம்ஜிஆர் தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 12.30 மணிக்கு "கழிவறைக்கு" சென்று வந்தார். சிறிது நேரத்தில் "நெஞ்சு வலிக்கிறது" என்று கூறினார். அவருக்கு தண்ணீர் கொடுத்தார்கள். அதை வாங்கிக் குடித்ததும் மயக்கம் அடைந்தார். உடனே மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். மீண்டும் இதயத்துடிப்பு வருவதற்கு உரிய சிகிச்சைகள் செய்தார்கள். ஆனால், சிகிச்சை பலன் அளிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது. "திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் எம்ஜிஆர் மறைந்து விட்டார்" என்று மருத்துவர்கள் அறிவித்தனர். எம்ஜிஆருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி கிடைத்ததும், அமைச்சர்கள் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டுக்கு விரைந்து சென்று அங்கேயே இருந்தனர்.
அப்போது, எம்ஜிஆர் அருகிலேயே அழுதபடி இருந்த ஜானகி அம்மாள் மயக்கம் அடைந்தார். பின்னர், எம்ஜிஆர் மறைவுச் செய்தியை அறிந்ததும், ஜெயலலிதா உடனடியாக ராமாவரம் தோட்டத்துக்கு விரைந்தார். கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து விட்டு காலை 5.45 மணிக்கு ரயில் மூலம் சென்னை வந்து சேர்ந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, எம்ஜிஆர் மரணச்செய்தி தெரிவிக்கப்பட்டது. துயரம் அடைந்த அவர், உடனே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேராக ராமாவரம் தோட்டத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் ராமாவரம் தோட்டத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் எம்ஜிஆர் உடல், காலை 8.40 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் இருந்து பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு 6 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதில் எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்டது. ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். எம்ஜிஆர் உடலைக் கண்டு அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எம்ஜிஆர் மரணம் அடைந்ததை அடுத்து நிதியமைச்சர் நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் குரானா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எம்ஜிஆரின் மறைவு அவரது மனைவி ஜானகி அம்மாளை வெகுவாகப் பாதித்தது. அதனால், அவர் ராஜாஜி மண்டபத்துக்கு செல்ல மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. ஜானகி அம்மாளை ராமாவரம் வீட்டில் தங்க வைத்து மருத்துவர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர். எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி மண்டபத்திலேயே இடைக்கால முதலமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
அண்ணா சமாதிக்கு தென்புறத்தில், எம்ஜிஆர் உடலை சந்தனப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எம்ஜிஆர் இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் நடைபெறும் என்று தலைமைச் செயலாளர் பத்மநாபன் கூறினார். எம்ஜிஆர், உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது. உடல் அருகே அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தனர். ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். ஆண்களும், பெண்களும் நீண்ட "கியூ" வரிசையில் நின்றனர். அவர்களில் பலர் அழுதபடி இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பொதுமக்கள் விடிய விடிய எம்ஜிஆர் உடலுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆண்கள், பெண்கள் தனித்தனி நீண்ட கியூ வரிசைகளில் நின்றனர்.