சென்னையில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ நீரை பெறுவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் 600க்கும் மேற்பட்ட ஒப்பந்த லாரிகளை இயக்கி குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், சென்னை நகர மக்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள் முன் பணம் செலுத்தி குடிநீர் பெறலாம் என்ற வாய்ப்பை கடந்த வருடம் ஏற்படுத்தி கொடுத்த நிலையில், ஆன்லைன் பதிவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கள நிலவரத்தைத் தெரிந்து கொள்ள குடிநீர் வாரிய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ’இந்த ஆன்லைன் பதிவு மூலம் நிறுவனங்கள் 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் லிட்டர் தண்ணீரை பெற்று கொள்ளலாம்.
கடந்த ஆண்டு பெய்த நல்ல மழையினால், ஏரிகளில் நீர் இருப்பு போதுமான அளவு உள்ளது. எனவே நுகர்வோர்கள் தங்கு தடையின்றி முன் பதிவு செய்து குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.