சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயிலின் திட்டப்பணிகள் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தபட்டு வருகின்றது. அதில் முதலாம் கட்ட திட்டத்தில், இரண்டு வழித்தடங்களாக, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மற்றும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து சென்னையில் தற்போது, 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 116.1 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலும் தற்போது 45-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டபாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதில் 40 கி.மீ-க்கு மேல், பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, 4-ஆம் வழித்தடமான கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில், உயர்மட்ட பாதையானது 40% சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது கலங்கரை விளக்கத்தில், சுரங்கம் தோண்டும் பணியானது இன்று (செப்-01) தொடங்கியுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்ததாவது, “கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தூரத்தில், 9 சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
வழித்தடம் 4, சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் 10 கி.மீ. நீளத்திற்கு, கலங்கரை விளக்கத்தில் தொடங்கி, சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், கட்சேரி சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக செல்கிறது.