குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் இன்று காலை 8 மணியளவில் தொழிலாளர் துறை சார்பாக மெட்ரோ ரயில் விழிப்புணர்வு பயணம் டிஎம்எஸ் ரயில் நிலையம் முதல் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை நடத்தப்பட்டது.
இதனைத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், தொழிலாளர் ஆணையர் நந்தகோபால், திரைப்பட நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதில் 200 பள்ளிக் குழந்தைகளுடன் தொழிலாளர் நலத் துறை அலுவலர்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், 'குழந்தைப் பருவம் என்பது மிக முக்கியமானது. சிறப்பான வருங்கால இந்தியாவை முன்னெடுக்க விரும்பினால் இந்தக் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்' என்றுக் கேட்டுக்கொண்டார்.
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழா பின்னர் பேசிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில்:
இன்றைய நாள் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளிலும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.