சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் நிவர் புயல் குறித்த தகவல்களை செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தார். அப்போது, "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 430 கி.மீ தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. அது மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து வருகின்ற 12மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதைத்தொடர்ந்து அதி தீவிரப் புயலாகவும் மாறக்கூடும்.
வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால், மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும். காரைக்கால், நாகை, கடலூர், புதுவை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு காற்றின் வேகம் 120 முதல் 130 கி.மீ ஆக இருக்கும்.