சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், பல மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதில், "தமிழகத்தில் இதுவரை மழைப்பதிவானது 153.6 மி.மீ(மில்லி மீட்டர்) ஆகும். மேலும், இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 210.9 மி.மீ., ஆகும். இது இயல்பை விட 27% குறைவான மழைப்பதிவாகும். மேலும், இன்றைய தேதியில் தமிழகத்தில் இயல்பான மழை அளவு 8.4 மி.மீ., ஆகும். ஆனால் தற்போது பெய்த மழை அளவானது 19.7% ஆகும். இது இயல்பை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் குறைந்த மழை அளவைப் பெற்றதால், தற்போது நவம்பர் தொடக்கத்தில் இருந்தே மழை அளவு உயர்ந்துள்ளாதக தெரிய வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு: கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 13.செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, வீரபாண்டி (தேனி), தொண்டி (ராமநாதபுரம்) தலா 11 செ.மீ மழையும், போடிநாயக்கனூர் (தேனி), செங்கோட்டை (தென்காசி), திருப்பூர் PWD தலா 10 செ.மீ மழையும், தம்மம்பட்டி (சேலம்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), ராமநாதபுரம், எடப்பாடி (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்) ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தார், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் கன மழையும், இதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, தருமபுரி, சிவகங்கை,விழுப்புரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக பருவமழையானது பெய்துள்ளது.
இதையும் படிங்க:66 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்! 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!