சென்னை:தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
இது அக்டோபர் 21ஆம் தேதி வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதேப்போல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
மழைக்கான வாய்ப்பு: தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழைப்பதிவு: அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு மலைக் கிராமம் பகுயில், 10 செ.மீ. மழைப்பதிவு ஆகி உள்ளது. அதேப்போல், கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), பரமக்குடி (ராமநாதபுரம்), மேட்டுப்பாளையம் பில்லூர் அணை (கோயம்புத்தூர்) தலா 9செ.மீ. மழைப்பதிவு ஆகி உள்ளது.
தொடர்ந்து, திண்டிவனம் (விழுப்புரம்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 8 செ.மீ. மழையும், ஊத்து (திருநெல்வேலி), செங்கோட்டை (தென்காசி), பாபநாசம் (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ. மழைப்பதிவு ஆகி உள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5 செ.மீ. முதல் 1 செ.மீ. மழைப்பதிவு ஆகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: நாளை (அக்.19), கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு-மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல், நாளை மறு நாள் தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி போனஸ்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!