சென்னை: தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் (நவ-1 முதல் நவ-7) மொத்தமாக 77.44 மீ.மீ மழைப் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதில் ஒரு சில மாவட்டங்களில் கன மழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையில், அவ்வப்போது லேசான மழையானது ஓரிரு பகுதிகளில் மட்டும் பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் 12.செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.
மேலும், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தின், பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பரவலாகப் பெய்து வந்தாலும், இன்னும் தீவிரம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பருவமழையானது, மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், சில உள் மாவட்டங்கள், வடமேற்கு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தான் பரவலாகப் பெய்து வருகிறது.
மேலும், இப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழைப் பதிவாகி உள்ளது. வேலூர், திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, உள்ளிட்ட சில மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவாக மழைப் பதிவாகி உள்ளது.
மழைப் பதிவுகள்: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் 12.செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. இதே போல், சிவலோகம் (சிற்றாறு-II) (கன்னியாகுமரி) பகுதியில் தலா 12 செ.மீ மழை அளவும், ராஜபாளையம் (விருதுநகர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 11 செ.மீ மழையும், தொண்டி (ராமநாதபுரம்) பகுதியில் 10 செ.மீ மழை அளவும் பதிவாகி உள்ளது.