சென்னை: வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே புயல் சின்னம், அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவ.27ஆம் தேதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மீனவர்களுக்கு தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ஆம் தேதி நெருக்கத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதனால் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனையடுத்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதிகளில், 27ஆம் தேதி அன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
இதேபோல் 28 மற்றும் 29ஆம் தேதிகளில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள். தற்போது ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்" என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: போச்சுடா... மீண்டும்.. மீண்டுமா? - சென்னை வானிலை மையம் கொடுத்த ஷாக்!