சென்னை: இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.22) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இன்று காலை அக்.22 ஆம் தேதி 08.30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு-வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 1460 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்.23 ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்.24 ஆம் தேதி காலை புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்.25 ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு சந்திப்பின் இடையில் கரையைக் கடக்கும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.