சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துவருகிறது. இந்நிலையில் கரோனாவுக்கு தன் பெற்றோரைக் காவு கொடுத்துவிட்டு தனித்துவிடப்பட்டுள்ளார், 26 வயது நிரம்பிய மணி.
பொதுவாகவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தங்க தட்டில் வைத்து தாங்கத்தான் ஆசைப்படுவார்கள். மணியின் பெற்றோர் ஏ.கே. அருணாச்சலமும் (62), கீதாவும்கூட (58) அப்படித்தான். மூளை வளர்ச்சிக் குன்றிய தங்கள் மகனை கொஞ்சம்கூட கஷ்டம் தெரியாமல் வளர்த்துவந்தனர்.
கே.வி.பி. கார்டனில் வசித்து வந்த இவர்களுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கே.வி.பி. கார்டனும் ஒன்று. இதனால் கடந்த சில வாரங்களாக இப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் கரோனா?
சமூக ஆர்வலரான மணியின் தந்தை பார்வை குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி. தன்னுடைய அறிவுக்கூர்மை, நிர்வாக ஆற்றலால் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநிலத் தலைவராகப் பணியாற்றினார்.
இந்த ஊரடங்கு காலத்தில் கூட பார்வையற்றவர்கள் உணவுக்கு தவிக்கக் கூடாது என களத்தில் இறங்கி வேலை செய்தார். இதனால் ஏதோவொரு புள்ளியில் கரோனா தொற்றுக்கு ஆளானார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவி கீதா மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய மகன் மணி ஆகியோரும் தொற்றுக்கு ஆளாகினர்.
இதையடுத்து மூவருக்கும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி மணியின் தந்தை இன்றும், தாய் நேற்றும் (ஜூன் 30) காலமாகினர். தற்போது தன்னுடைய பெற்றோரின் இழப்பை அறியாத இளைஞன் மணி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுமைக்காலத்திலும் கண்மணி போல தங்கள் பிள்ளையை பாதுகாத்த அருணாச்சலம், கீதா தம்பதியினரின் கடைசி நிமிடங்களின் ஏக்கம் ’இனி மணியை யார் கவனித்துக் கொள்வார்கள்?’ என்பதாகத்தான் இருந்திருக்கும். அரசு தாமாக முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்தக் குரலாக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு: 1000 கி.மீ. பின்னோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரர்!