சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய சேவைத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக் 3) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுப் பணிகள் குறித்து, தென்னக ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மீன்வளத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, பி.எஸ்.என்.எல்., சென்னை மாநகரப் போக்குவரத்து, வேளாண்பொறியியல் துறை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலோரக் காவல் படை, சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.
நிவாரண மையங்கள்: இக்கூட்டத்தில் மேயர் அலுவலர்களுடன் பேசுகையில், மழை வெள்ளத்தின்போது பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கக்கூடிய வகையில் மாநகராட்சி பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், கல்யாண மண்டபங்கள் என 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்திடவும், மழைக்கால வியாதிகளுக்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள 101 நடமாடும் மற்றும் நிலையான மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தூர்வாரும் பணி:நிவாரண மையங்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஒரே நேரத்தில் 1,500 நபர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் வகையில் பொது சமையலறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 15 நீர்வழிக் கால்வாய்களில் நீர்வளத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், கழிவுநீர் கால்வாய்களின் நுழைவு வாயில்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.