பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எறையூர் சர்க்கரை ஆலையின் 43ஆவது பங்குதாரர்களின் பேரவைக் கூட்டம் சர்க்கரை துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக 10 தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், டெல்லியில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கை மனு:
- மத்திய அரசானது தற்போது கரும்பு டன்னுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 2707.50 வழங்கி வருகிறது. எனவே தமிழ்நாடு அரசானது முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி 2020-21ஆம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு, தற்போது உள்ள விலையை உயர்த்தி ரூ. 4,500 வழங்க அறிவிக்க வேண்டும்.
- அதுபோல இணை மின் திட்டத்திற்கு விவசாயிகளின் பங்கு தொகையாக சுமார் 12 கோடிக்கு மேல் வழங்கியுள்ளோம். ஆனால் இதுவரை பங்கு தொகை வழங்கியதற்கான பங்கு பத்திரம் வழங்கவில்லை. எனவே, விவசாயிகளுக்கு உடனடியாக பங்கு பத்திரத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை, சர்க்கரை துறை ஆணையரிடம் அனைத்து கரும்பு விவசாயிகள் வழங்கினர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி முகமது அஸ்லாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு முகாம்!