சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விளையாட்டு நிகழ்ச்சிகள், சில போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றை கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் செலவழிக்கவும், உயர் அலுவலர்களிடம் தங்களது தேவைகளை எடுத்துரைத்து மகிழ்ச்சியுடன் பணிபுரியவும், ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி நடத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கு பெறும் ‘கூடுவோம் கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 19.09.2022 முதல் மேற்கு மண்டலம், அண்ணாநகர், கோயம்பேடு மற்றும் கொளத்தூர் மாவட்ட காவல் அலுவலர்கள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே சமையல், ரங்கோலி, இசை நாற்காலி போட்டிகள், குழந்தைகளுக்கான கட்டுரை போட்டிகள் உள்பட பல போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை மேற்கு மண்டல காவலர்களுக்கான ‘கூடுவோம் கொண்டாடுவோம்’ சிறப்பு நிகழ்ச்சி இதன் தொடர்ச்சியாக நேற்று (அக் 2) வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் "கூடுவோம் கொண்டாடுவோம் (MEET & GREET)" என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
குழந்தைகளின் நடன நிகழ்ச்சி தொடர்ந்து தங்களது திறமைகளை வெளிக்கொணரும் அடையாளமாக காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் பங்கு பெற்ற SKIT என்ற மூன்று நிகழ்ச்சிகளையும், பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியையும் கண்டு களித்தார். இதனையடுத்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் கலந்து கொண்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் இதேபோல் மற்ற மூன்று மண்டலங்களிலும் காவலர்களின் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:சென்னையின் துப்பு துலங்காத 8 கொலை வழக்குகள் - கிரைம் கட்டுரை