தமிழ்நாட்டில் மருத்துவக்கழிவுகளை சுத்திகரிக்க போதிய பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. இதனால் கரோனா பேரிடர் காலத்தில் மருத்துவக்கழிவுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக்கழிவுகளைச் சுத்திகரிக்க பதினொன்று பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 47 டன் மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தகவல் தெரிந்துகொள்ள முடிகிறது.
அதில் வெறும் 34 டன் கழிவுகள் சுத்திகரிப்புக்கு உள்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 13 டன் சுத்திகரிக்கப்படாமல் மற்ற மாநகராட்சி திடக்கழிவுகளுடன் கலப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மேற்கோள்காட்டி விமர்சிக்கின்றனர்.
மருத்துவக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சிறப்புக் கவனம் தேவை என்பதால் மருத்துவக்கழிவுகளைத் தனியாக அப்புறப்படுத்த வேண்டும் என மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகள் கூறுகின்றன.
கரோனா போன்ற பேரிடர் காலத்தில் பெருந்தொற்று மருத்துவக்கழிவுகள் மூலம் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே, கரோனா பெருந்தொற்று தொடர்புடைய மருத்துவக்கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.
அவ்விதிமுறைகள், மருத்துவக்கழிவுகள் மற்ற மாநகராட்சி திடக்கழிவுகளுடன் சேராமல் இருக்க ஐந்து வெவ்வேறு நிற சேகரிப்பு பைகளைக்கொண்டு பிரித்தெடுக்கவும், கூடுதலாக கழிவைக் கையாளும்போது கசிவு ஏற்படுவதைத் தடுக்க அக்கழிவுகளை இரண்டடுக்கு பாதுகாப்புள்ள பைகளில் எடுத்துச்செல்ல வலியுறுத்துகிறது.
கரோனா வார்டுகளிலிருந்து வரும் மருத்துவக்கழிவுகளை எளிதில் அடையாளப்படுத்தும்விதமாகவும், அதை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காகவும் அக்கழிவுகள் 'கோவிட்-11 கழிவு' என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும். கரோனா கழிவு மற்ற மருத்துவக்கழிவுகளுடன் கலக்காமல் இருப்பதற்கு மருத்துவமனைகள் கரோனா கழிவுகளைத் தனியாக ஒரு அறையில் சேகரித்துவைக்க வேண்டும், அல்லது வார்டில் இருந்தபடியே நேரடியாகச் சம்பந்தப்பட்ட ’Treatment Facility’ க்கு அனுப்பிவைக்க வேண்டும்.