தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான 28ஆம் தேதி விடுமுறையாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 28ஆம் தேதி சில தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விடுமுறை அறிவித்து இருப்பதால் அந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுகின்றன.
முதுகலை மருத்துவப் படிப்பில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான தேர்வு 28ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு நவம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறும். அதேபோல் இந்திய மருத்துவத்திற்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறும். இதுகுறித்து கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இரண்டு மருத்துவக்கல்லூரிகளில் தேர்வு மையங்கள் ரத்து செய்தது குறித்து தேர்வு ஒழுங்கு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அது குறித்த விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு ஒழுங்கு குழு என்ற அமைப்பு நிலையாக பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்தக் குழுவானது தேர்வின்போது நடைபெறும் தவறுகளை பொறுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும். பல்கலைக்கழக சட்ட விதிகளின் அடிப்படையில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.