இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 மாணவர்களுக்கும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.11,000 மட்டுமே. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இது தடையாக இருக்காது. ஆனால், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 3.85 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.2.50 லட்சம் வசூலிக்கப் படுகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரி என்றாலும் கூட, அங்கு தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் காட்டிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் தான். இவை தவிர ரூ. 3 லட்சம் வரை மறைமுகக் கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன.
தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் செலுத்த வேண்டிய விடுதிக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் சேர்த்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், அரசு பள்ளிகளில் படித்த ஏழை - கிராமப்புற மாணவர்களால் இந்த அளவு கட்டணத்தை செலுத்து வாய்ப்பு இல்லை.