சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளதால், அவர்கள் இறப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் மாநில அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிலிருந்து எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள்? என கேள்வி எழுப்பிய ரவீந்திரநாத், அதன் விவரத்தினை வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுஷ் படிப்பிற்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ரவீந்திரநாத், அதற்கு தமிழ்நாடு அரசு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 6,500 மருத்துவ இடங்கள் உள்ளது என குறிப்பிட்ட ரவீந்திரநாத், ஆனால் அதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பயன் பெற முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
அதேபோல் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் 490 மருத்துவ இடங்களில் வெளிமாநில மாணவர்கள் பயில்வதாக சுட்டிக்காட்டிய அவர், அதே நேரத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசு மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாற்றம் செய்து பெறுவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ரவீந்திரநாத் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் சூழ்ச்சி நடைபெற்றுள்ளதாக ரவீந்திரநாத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.