சென்னை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜனவரி 28) ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹரி கணேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 28ஆம் தேதி போராடும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 13,600 ரூபாயும், எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கு 27 ஆயிரம் ரூபாயும், பி.டி.எஸ் படிப்பிற்கு 11 ஆயிரத்து 610 ரூபாயும், எம்.டி.எஸ் படிப்புக்கு 27 ஆயிரம் ரூபாயும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரமும், பி.டி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரமும், எம்.டி.எம்.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.