சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தா, தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொது செயலாளர் டாக்டர் ஜி.ஆர் இரவீந்திரநாத் கூறுகையில்; "கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை கல்லூரியில், மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சிறிய பிரச்சனைகளுக்கு கூட அதிக அபதாரம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், மாணவர்களை கல்லூரியின் விடுதியில் தான் தங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும், சைக்கில், பைக் போன்ற வாகனங்கள் வைத்துக் கொள்ள கூடாது எனவும் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாணவர்களை கொத்தடிமை போல் நடத்தப்படுவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதே போன்று பிற தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும், மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதனால் மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இது குறித்து விசாரனை நடந்த ஒர் விசாரனை குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து, மனித உரிமை மீறல்களுக்கான காரணங்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்; பயிற்சி மருத்துவர்களுக்கும் ,பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் பணி வழங்கக் கூடாது . இது தொடர்பாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தொடுத்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஆணாதிக்க மனநிலைக்கு எதிராகவும், பென்களின் உரிமைகள், பாலின சமத்துவம், மரியாதையுடன் நடந்து கொள்வது ஆகியவற்றை குறித்து சிறுவயதில் இருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:LA28 Olympics: 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு.. நீடா அம்பானி மகிழ்ச்சி!