சென்னை: ஆவடியை சேர்ந்த 21வயது இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா காலத்தின் போது ஊரடங்கில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கல்லூரி மாணவர் பிரதீப் (21) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் திடீரென ஒரு நாள் பிரதீப் இளம்பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, கேமரா மூலம் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததை தொலைக்காட்சியில் போட்டு காண்பித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்ட போது, சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோவை பகிர்ந்து விடுவதாக கூறி பிரதீப் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பிரதீப் மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த இளம்பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும் தொடர்ச்சியாக பிரதீப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த காரணத்தினால் மன உளைச்சல் அடைந்த இளம்பெண் மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.