எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில், சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவில் இருந்துவருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
கடந்த மார்ச் 21 ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. ஓய்வுப் பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை, நீதித்துறை செயலாளர்கள், வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜோதி முருகன், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் ஜி.பழனிசாமி, மருத்துவக்கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை பலமுறை கூடி, தீர ஆராய்ந்து இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையைத் தயார் செய்துள்ளது.