வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவை: சென்னையில் 387.39 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 524. 61 நீளம் கொண்ட 33 ஆயிரத்து 845 தெருக்களும் உள்ளன. சென்னை மாநகராட்சியில் 196 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு விடுபட்ட 498 இணைப்புப் பணிகள், 406 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் குளங்கள் மறுசீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் 306 இடங்களில் மழைநீர்த் தேக்கங்கள் இருந்தது. தற்போது மூன்று இடங்களில் மட்டுமே மழைநீர்த்தேக்கங்கள் உள்ளன.
கூவம், அடையாறு மற்றும் கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் 16 ஆயிரத்து 768 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பருவமழைக் காலங்களில் மழைநீர் வடிகாலில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பருவமழைக் காலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.