பாதுகாப்புத்தொழில் துறை உள்நாட்டில் வளர்ச்சி பெறுவது உள்நாட்டு வணிகத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியமானதாகிறது. உள்நாட்டு பாதுகாப்புத்துறை தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய பட்ஜெட் 2021-22இல் என்ன திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்பது பற்றி தொழில்துறையினர் சிலரிடம் பேசினோம்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல்:
சென்னையில், பாதுகாப்புத்துறை மற்றும் இஸ்ரோவுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து அனுப்பும் கனகமூர்த்தி, பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி குறித்து விரிவாகப் பேசினார்.
‘பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி மிகவும் தரமாக இருக்க வேண்டும். புள்ளி அளவுக்குக்கூட தவறுகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மத்திய அரசு பல்வேறு துறைகளில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறது. அதேபோல், பாதுகாப்பு உற்பத்தியிலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.
உற்பத்தியாளர் கனகமூர்த்தி பாதுகாப்புத்துறை உற்பத்தியில் மிகப் பெரிய சவாலே ராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை வடிவமைப்பது தான். இதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும். மற்ற பொறியியல் பொருட்கள் உற்பத்தியைப்போல, உடனடியாக மாதிரி படத்தை வரைந்து தயாரித்துவிட முடியாது. இங்குள்ள நிறுவனங்களுக்கு பிரச்னையாக இருப்பதே, இதற்கான சோதனைக் கூடங்கள் தான்.
வங்கிகள் தயாரிப்புகளுக்கு மட்டுமே கடன் தருகிறார்கள், புதிய பொருட்களை வடிவமைப்பதற்கு நிதி வசதி கிடைப்பதில்லை. அரசு இதற்கு தனிக்கவனமெடுத்து நிதி வழங்க வேண்டும். பாதுகாப்புத்துறைக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய அதிநவீன இயந்திரங்கள் தேவைப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் அவற்றை உற்பத்தி செய்ய முடியாது. இதனை சாத்தியப்படுத்த பொதுவான ஆய்வகங்கள், சோதனைக்கூடங்கள் மற்றும் உற்பத்தி தளங்கள் அமைக்க வேண்டும்.
சிறு,குறு நிறுவனங்களின் பங்கு
பாதுகாப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம், கட்டடங்கள் கிடைக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடம் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்க மிகப்பெரிய அளவில் உதவும். அரசு அதனை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்' என்றார்.
பாதுகாப்புத்துறைக்குத் தேவையான பொருள்கள் சிறு,குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யமுடியாததற்கு என்னென்ன காரணங்கள் என்பதை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் பாலச்சந்திரன் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
'அம்பத்தூரில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தில் ஈடுபடுவதில்லை. பாதுகாப்பு தேவைகளுக்கான உற்பத்திக்கு கனரக இயந்திரங்கள் மற்றும் உலோகங்கள் தேவைப்படும். அதேபோல் அவர்கள் மொத்தமாக மிகப்பெரிய அளவுக்கு ஆர்டர்களை வழங்குவர். இதனை சிறு, குறு நிறுவனங்களால் செய்ய முடியாது. மத்திய, மாநில அரசுகள் இங்குள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு ஏற்படுத்தி, அதன் பிற்பாடு பணிகளை வழங்க வேண்டும்'என கள நிலவரங்களைக் கூறி முடித்தார்.
தொழில்நுட்பமும் அவசியம்!
இது மட்டும் தான் பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காததற்கு காரணங்களா என்று கேட்டால், இல்லை... இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன என்பதாக சில தகவல்களை சொல்லத் தொடங்குகிறார், இந்திய ரஷ்ய வர்த்தக சபைத் தலைவர் தங்கப்பன்.
‘இந்தியாவில் உள்ள தொழில்நுட்பத்தில் பெரும்பாலானவை ரஷ்யத் தொழில்நுட்பம். அண்மையில் வாங்கப்பட்ட ரஃபேல் பொருட்களை மட்டுமே நமக்கு அளிக்கிறார்கள். இது தொடர்பான தொழில்நுட்பத்தை நமக்கு வழங்கவில்லை. இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிடக்கூடாது என்ற சர்வதேச அரசியல் உள்ளது. இதனை உடைக்க வேண்டும். ரஷ்ய நாடானது இயந்திரங்கள், அதற்கான உதிரிபாகங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பத்தை நம்முடன் பகிர்ந்துகொள்வதுடன் உற்பத்திக்கான முதலீடும் செய்கிறார்கள். இதுபோன்ற தொழில் நுட்ப பகிரல் மூலம் இங்குள்ள நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி பெறும்.
இந்திய ரஷ்ய வர்த்தக சபைத் தலைவர், தங்கப்பன் தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடத்தில் ரஷ்ய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. இதற்கான வசதி ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை ஆகியோரிடம் ஆலோசித்து வருகிறோம். இங்கு, ரஷ்ய பாதுகாப்புத் தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஆழைத்து வர நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசு இதற்கான சலுகைகளை, விதிமுறைகளை இறுதிப்படுத்தி வருகிறது. பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதனால் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யும் பொருட்களை அவர்களே வாங்கத் தயாராக உள்ளனர். இங்கு உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்" என்றார்.
மத்திய அரசின் நடவடிக்கைகள்:
மத்திய அரசு தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஓசூர் ஆகியப் பகுதிகளை இணைத்து பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்க 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியது. பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திக்காக தனி உற்பத்தி மையம், நிறுவனங்களுக்கென பொதுவான சோதனைக்கூடம் மற்றும் சான்றளிக்கும் வசதி, ஏற்றுமதிக்கு உதவும் அமைப்புகள், தொழில்நுட்பப் பகிர்வு ஆகிய வசதிகள் பாதுகாப்பு வழித்தடத்தில இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் 3 ஆயிரத்து 123 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டன. இருப்பினும் இதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படவில்லை என்றப் புகார் உள்ளது.
அடிப்படை பிரச்னைகளை களைதல்:
உள்நாட்டில் பாதுகாப்பு உற்பத்தி செய்வதால் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் பயனடைவதுடன் நாட்டின் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்கிறார், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன்.
தொடர்ந்து பேசிய அவர்,'கடந்த 6 மாதங்களில் இந்திய- சீன எல்லையில் நெருக்கடி ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. இதுபோன்ற நேரங்களில் மற்ற நாடுகளிடம் உதிரிபாகங்கள், ராணுவத் தளவாடங்கள், ராணுவ உற்பத்திக்கான மூலப் பொருட்கள் ஆகியவற்றை கேட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்தால் பிறரை சாராமல் தன்னிறைவுடன் இருக்காலம். இதனால் நாட்டின் பாதுகாப்பு வலுப்பெறும்.
இங்குள்ள நிறுவனங்களுக்கு அடிப்படையில் என்ன பிரச்னைகள் இருக்கிறது, கட்டமைப்பில் என்ன குறைபாடு உள்ளது என்பதை கண்டறிய வேண்டும் . ராணுவத்துக்கான தேவை என்ன என்பதை நிறுவனங்கள் நன்கு அறிந்து, ராணுவதற்கு ஏற்ற தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உரிய தேவையை உற்பத்தியாளர்கள் கண்டுபிடிப்பது தான் மிகப் பெரிய சவால். உள்நாட்டில் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் முன் அதற்கான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி மூலம் கண்டறிய வேண்டும்.
ஓய்வுப்பெற்ற லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் இதன்மூலம் இந்திய ராணுவத்துக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடத்துக்குத் தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய திட்டம், குறுகிய காலத்தில் இதன் பலனை எதிர்ப்பார்க்கக்கூடாது; நீண்ட கால உழைப்பிற்குப் பிறகு உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்பு வழித்தடம் சிறந்த வகையில் உதவும்" என்றார்.
இதையும் படிங்க:எதிர்வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கின்றனர் சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்கள்?