தமிழ்நாடு

tamil nadu

'தமிழ்நாட்டிற்காக நானும் ரஜினியும் அரசியலில் இணைவோம்' - கமல்ஹாசன்

By

Published : Nov 19, 2019, 8:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டால் இணைவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

rajini kamal

'கமல் 60' பாராட்டு விழா முடிந்தநிலையில் ஒடிசா சென்ற கமல்ஹாசன், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை புவனேஷ்வரில் நேரில் சந்தித்துப் பேசினார். இதனைத்தொடர்ந்து, இந்தியாவின் முதன்மையான திறன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசனுக்கு நவீன் பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

டாக்டர் பட்டம் பெற்ற கையோடு தமிழ்நாடு திரும்பிய கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''படிக்காத ஒருவருக்கு ஒடிசாவின் திறன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வழங்குவது இதுதான் முதல்முறை. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் இந்த விருதைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

ரஜினியும், நானும் இணைவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்துதான் இருக்கிறோம். அரசியலில் இணைய வேண்டிய நிலை வந்தால் இணைவோம். இப்பொழுது வேலைதான் முக்கியம். தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவ்வாறே சேர்ந்து பயணிப்போம். முதலமைச்சர் குறித்து நடிகர் ரஜினிகாந்த்தின் விமர்சனம் நிதர்சனமான உண்மை'' என்று தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன்

தொடர்ந்து இலங்கையில் ஆட்சி மாற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'கோத்தபய ராஜபக்சே நல்ல தலைவராக இருந்து இலங்கை மக்களுக்கு சமமான நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றார். பின்னர் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் குறித்த கேள்விக்கு 'நாடெங்கும் உள்ள தர்க்கம், படிக்கும் கல்லூரிகளில் நுழைந்திருப்பது வருத்தத்திற்குரியது' என்று வேதனை தெரிவித்தார் கமல்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற 'கமல் 60' பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ்நாட்டின் நலனுக்காக ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details