ஊரடங்கு உத்தரவினால் பாதிப்படைந்துள்ள ஏழை மக்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் தாமாக பொருள்கள் நேரடியாக கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், "அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மனிதநேயம் உள்ளோர் பிறர் துன்பத்தில் பங்கெடுக்க விளைவோர் ஆங்காங்கு முறையாகப் பொருள்களையும், உணவையும் வழங்கி வருகின்றனர். இப்படி வழங்குவதில் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும், எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை.
தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமலேயே மனிதாபிமான உதவிகள் செய்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய கடமையைத்தான் அவர்கள் செய்துவருகின்றனர். இத்தகைய உதவிகள் செய்வோரைக் கண்டு மகிழ்ந்து பாராட்ட வேண்டிய தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும், மற்றவர்களும் இந்த மனிதநேயப் பணிகளைச் செய்து, மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறதே என்ற பொறாமைத் தீ, உள்ளத்தில் எழுந்ததால் இன்று ஒரு அக்கிரமமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது.
தனிப்பட்டவர்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொருளோ, பணமோ, உணவோ கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுப்பதாக இருந்தால் தமிழ்நாடு அரசிடம்தான் தர வேண்டும் என்று இடி அமீன் கட்டளையைப் பிறப்பித்து இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கேரளாவில் பாதியாக குறைந்த குற்றங்கள்