தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுக : வலியுறுத்தும் வைகோ! - new draft on Electricity amendment bill

சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

By

Published : May 4, 2020, 10:04 AM IST

வேளாண்மை, கைத்தறி நெசவுத் தொழில்களை பாதுகாக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசு ‘மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020’ எனும் மசோதா ஒன்றைக் கொண்டுவந்து, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று, மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது.

இந்த மசோதாவில், மாநில மின்சார வாரியங்களைப் பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் மின் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தால், உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க விநியோகிக்கும் உரிமையை அவர்களே பெற்றுவிடுவார்கள்.

மேலும், மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்றுவிடும். தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, விநியோகம் செய்யும் நிறுவனங்களாக மின்சார வாரியங்கள் மாற்றப்படுவதால், சேவைத்துறை என்பது வர்த்தகமாக மாற்றப்பட்டு மின் கட்டணம் உயரும் ஆபத்து ஏற்படும்.

இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். மேலும், மிகவும் நலிவுற்ற ஏழைகள், தாழ்த்தப்பட்டோரின் குடிசைகள், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரமும் ரத்தாகும் நிலை உருவாகும்.

ஊரடங்கில் நாட்டின் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு வஞ்சகமாக, இந்த மின்சார சட்ட முன்வடிவைச் சட்டமாக்கத் துடிக்கிறது. இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாயிகள் நீர்வளங்களைப் பயன்படுத்தி, மக்களுக்குத் தேவையான உணவு தானியங்கள், காய்கறிகளை உற்பத்தி செய்து, சந்தைக்கு கொண்டுவருகின்றனர்.

தொடர்ந்து நட்டம் ஏற்பட்டாலும், வேளாண் தொழிலில் விவசாயிகள் இன்னமும் நீடிப்பதற்கு இலவச மின்சாரமும் ஒரு காரணமாகும். இதனை ரத்து செய்வது மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். எனவே மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற, தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட வேண்டும்.

மத்திய பாஜக அரசு வேளாண்மை, கைத்தறி, நெசவுத் தொழில்களை பாதுகாக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:‘மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து வழங்கப்படும்’ - முதலமைச்சர் நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details