இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கு நீட்டித்திருக்கின்ற நிலையில், தற்போது எழுந்துள்ள பல பிரச்னைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் உடனடித் தீர்வு காண வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், தொழில்களை இயக்குவதற்கு அரசு பெருந்தொகையை நிதியுதவியாக அறிவித்துள்ளன. அதுபோல, தமிழ்நாட்டில், தொழில்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன. மின் கட்டணம் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் அன்றாட உணவுக்கும் உறுதி இல்லை. எனவே, தொழிற்சாலைகள், வீடுகள் அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு மாத மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். வளைகுடா நாடுகளில் 2 கோடிக்கும் கூடுதலான இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அங்கே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைகளில் சேர்க்க இடம் இல்லை. எனவே, வீட்டிலேயே வைத்துப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார்கள்.