சென்னை:மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது பேசிய அவர், "162 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில், 142 பேர் கலந்து கொண்டனர். பயனுள்ள முறையில் விவாதங்கள் நடைபெற்றன. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள கையெழுத்து இயக்கத்தின் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத்தின் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துயிட்டு வருகின்றனர்.
தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் கருதுவதாக குடியரசு தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து இயக்கம். ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் பெங்களூரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஆளுநருக்கு எதிராக நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது.
இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்தை நியாயப்படுத்தி பிரதமர் மோடி பேசுகிறார். ஒரு நாட்டில் இரண்டு சட்டம் தேவை இல்லை. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி இருக்கிறார். இது நாட்டுக்கே கேடாக முடியும்.
இந்த பொது சிவில் சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது. கர்நாடகா முதல்வர் சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறுகிறார். அது கண்டனத்துக்குரியது, சித்தராமய்யாவின் கருத்து உச்சநீதிமன்றத்திற்கு எதிராக உள்ளது.