மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (டிச. 05) அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் முக்கியப் பிரச்னைகள் குறித்து ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
மத்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களான வேளாண் விளைபொருள் வர்த்தகச் சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் போன்றவற்றையும், மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த வேளாண் சட்டங்களால் வேளாண்மைத் தொழில் முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பெரு நிறுவனங்களின் பிடிக்குள் சென்றுவிடும். எனவே, மத்திய அரசு இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்
காவிரியின் குறுக்கே ‘மேகேதாட்டு’ என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டுவதற்கு ரூ. 9 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ள கர்நாடக அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தீவிரமாக உள்ளது. இதற்கு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இத்திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரிப் பாசன மாவட்டங்களைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அறிவித்து சட்ட முன்வரைவை வெளியிட்ட தமிழ்நாடு அரசு எக்காரணத்தை முன்னிட்டும் காவிரி வடிநிலப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்