சென்னை :கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருவள்ளுவரின் உடை காவி நிறத்தில் இடம்பெற்றிருந்ததற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக அரசு, இந்துத்துவா சனாதன சக்திகளின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி அரசு, இந்துத்துவ சனாதன சக்திகளின் கைப்பாவையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரின் தலையீட்டீற்கு ஆதரவு வழங்கி வரும் அதிமுக அரசு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் நூலின் ஒரு பகுதியை நீக்கியது.
சென்னை பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணனை துறைத் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்ற சங் பரிவார் முயற்சி மேற்கொண்டது. அதனை ஏற்று ஆளுநரும் உத்தரவு பிறப்பித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை பாடமாக வைக்கவும், சமஸ்கிருத மொழியைத் திணிக்கவும் துணைவேந்தர் சூரப்பா முயன்றபோது, எடப்பாடி பழனிச்சாமி அரசு வேடிக்கை பார்த்தது.