தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

சென்னை: மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

MDMK general secretary vaiko
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

By

Published : Jul 30, 2020, 10:29 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியம் வாய்ந்த கல்வித்துறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும்போதும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால், நாடாளுமன்ற மக்களாட்சி கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வரும் பாஜக அரசு, எதேச்சதிகாரமாக புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்டுள்ள இந்தியாவை, 'ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு' என்று ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ஆரிய சனாதன ஒற்றைப் பண்பாட்டைத் திணிப்பதற்கு பாஜக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.

அதில் ஒன்றுதான் 'ஒரே நாடு ஒரே கல்வி முறை' என்கிற கோட்பாடு ஆகும். இதனைச் செயல்படுத்தவே புதிய கல்விக்கொள்கை வரையறுக்கப்பட்டு இருக்கிறது. மழலையர் பள்ளியிலிருந்து உயர் கல்வி, ஆராய்ச்சி மையம் வரை ஒட்டுமொத்தக் கல்வித்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கக்கூடிய அமைப்பாக தேசியக் கல்வி ஆணையம் இருக்கும்.

கல்விக் கொள்கை, நிதி ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, தர நிர்ணயம் வழங்குவது, பாடத்திட்டங்கள் உருவாக்கம் போன்ற அனைத்தும் இந்த ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும். மாநிலங்கள், தேசிய கல்வி ஆணையத்தின் உத்தரவுகளை கீழ்பணிந்து நிறைவேற்ற வேண்டும். மாநில அரசுகளுக்கு இனி கல்வித்துறை தொடர்பான எள் அளவு அதிகாரம்கூட கிடையாது. மாநில உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சிக் கோட்பாட்டை சிதைக்கும் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டுமா?

மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கி இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தைத் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே பொதுத் தேர்வு, கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு, ஒருங்கிணைந்த பள்ளிகள் திட்டத்தின்படி பள்ளிகளை மூடுதல், மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி எனும் பெயரால் இந்துத்துவ மனுதரும கோட்பாட்டின் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்துதல், கல்வி உரிமைச் சட்டம், தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நீர்த்துப்போகச் செய்தல், இணைய வழி தொலைதூரக் கல்வியை பரவலாக்குதல் போன்ற புதிய கல்விக் கொள்கை முன்வைத்துள்ள கூறுகள் அனைத்தும் கல்வியில் சமநிலை என்னும் கொள்கையைச் சீர்குலைக்கின்றன.

சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பும் வகையில், கோடானகோடி ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வெளிச்சம் பாய்வதை புதிய கல்விக் கொள்கை தடை செய்கிறது.

பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் முற்றாக நிராகரிக்க வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரான புதிய கல்விக் கொள்கையை பாஜக அரசு திணிக்க முற்பட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. எனவே, மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details