சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகின்றன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளி நாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் பலர் வேலை, வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்புவதிலும் இவர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு, வெளி நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ’வந்தே பாரத்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆயினும், இந்தத் திட்டத்தின் மூலம் மிகவும் குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுவாழ் தமிழர்கள், சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்து நாடு திரும்ப எண்ணினாலும், விமானங்களைத் தரையிறக்க மாநில அரசுஅனுமதி மறுப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு முழக்கங்களை எழுப்பி,சென்னை, அண்ணா நகரிலுள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனா தாக்குதலால், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். அன்றாட உணவுக்கு வழி இன்றித் தவித்து வருகின்றனர். அவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில்லை. ஏற்கனவே வசித்து வரும் அறைகளிலும் பலருடன் இணைந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது நிலையை எண்ணி, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளன.
தங்கள் சொந்த செலவில் விமானங்களை ஏற்பாடு செய்து, நாடு திரும்ப இருந்தவர்களையும் மத்திய அரசு தடுத்து நிறுத்தி விட்டது. அண்டை மாநிலமான கேரளா, வெளி நாடுகளில் சிக்கியுள்ள அம்மாநில மக்களை மீட்டு வரும் பணியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு வானூர்திகளை தரை இறக்க ஒப்புதல் தரவில்லை. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், மாநிலத்திற்கு போதுமான வான் ஊர்திகளை மத்திய அரசு அறிவிக்கவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக, தமிழ்நாடு அரசு ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த ஆர்பாட்டத்தில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சைதை சுப்பிரமணி உள்ளிட்ட 40 பேர் பங்கேற்றனர்.