சென்னை: திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட வைகோ, வாரிசு அரசியலை எதிர்த்து அக்கட்சியில் இருந்து 1993ஆம் ஆண்டு விலகி, 1994ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடனும் வைகோ கூட்டணி அமைத்துள்ளார். திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த வைகோ, 1999ஆம் ஆண்டு திமுக-பாஜக கூட்டணியில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது, திமுக கூட்டணியில் மதிமுக பயணம் செய்து வருகிறது. வைகோவின் மகன் துரை வைகோவிற்கு தலைமை நிலைய செயலாளர் பதவி கொடுத்தது முதல் மதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மதிமுகவை சேர்ந்த அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் வைகோவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் மதிமுகவிற்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை காட்டுகிறது. முன்பு கிளைக்கழக உறுப்பினர்கள் 25 பேர் இருக்க வேண்டும் என்ற விதியையே 10 உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று மாற்றியிருப்பது கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறதா அல்லது வீழ்ச்சியை காட்டுகிறதா அல்லது தற்போது மதிமுகவின் நிலைமை எப்படி உள்ளது என்பதை தங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். உங்களிடம் நேர்மையும் உண்மையும் இருக்குமானால் ஒவ்வொரு வார்டுகளிலும் உறுப்பினர்களாக புதுப்பித்து கொண்டவர்களையும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும், ஆதார் எண்ணையும் இணைத்து சங்கொலியில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.