சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பு 85 இடங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் கல்வி ஆண்டில் மீதமுள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் அவசர மருத்துவம் பட்ட மேற்படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்த அவசர சிகிச்சைப் பட்ட மேற்படிப்பு அகில இந்திய அளவில் இளங்கலையில் கட்டாயப் படமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் பட்ட மேற்படிப்பில் இடங்களைத்தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கிட்டு ஆணை வழங்கியும், அவசர சிகிச்சை பயிற்சியை பெற்ற மருத்துவர்களுக்கு சான்றிதழ்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
ஒதுக்கிட்டு ஆணை மற்றும் சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்கள் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையினை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக அவசர மருத்துவ சிகிச்சை துறை தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
எம்.டி அவசர சிகிச்சை பட்டம் மேற்படிப்பு மற்றும் தொடர் மருத்துவக்கல்வி எனும் புதிய பாடப்பிரிவு தமிழ்நாட்டில் உள்ள 23 மருத்துவக் கல்லூரிகளில் 85 இடங்கள் துவக்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதில் மாநில அரசின் ஒதுக்கீட்டில் 50 சதவீத இடங்களிலும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் 50 சதவீத இடங்களும் என நிரப்பப்பட்டுள்ளன.
அவசர சிகிச்சை துறையை உருவாக்குவதற்கு உலக வங்கி நிதி உதவியுடன் 100 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்பொழுது 23 கல்லூரிகளில் அவசர சிகிச்சைப் பட்டம் மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக துவக்கப்பட்ட அவசர சிகிச்சை பாடப்பிரிவினை நிதி ஆயோக் அமைப்பு பாராட்டியுள்ளது.
’இன்னுயிர் காப்போம் 24’, ’நம்மை காக்கும் 48’ திட்டங்களின் மூலம் விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு 673 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 11 மாதத்தில் ஒரு லட்சத்து 36ஆயிரத்து 164 பேர் விபத்து காப்பீட்டு மூலம் பயனடைந்துள்ளனர். இதற்காக 116 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அதேபோல் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஆறு மணி நேரத்தில் உடனடி அறுவை சிகிச்சை 23 சதவீதத்தில் இருந்து 69 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. உலக அளவில் விபத்துக்குள்ளானவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாகத் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் 1340 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் 300 ஆம்புலன்ஸ் பொருளில் அதிநவீன கருவிகள் பொருத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கருவுகளில் விபத்து நாள் பாதிக்கப்பட்டவரின் தகவல்கள் அனைத்தும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் வைப்பதற்குப் பயனுள்ளதாக உள்ளது.
தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரியில் 1450 இடங்களில் இளங்கலையில் எம்.பி.பி.எஸ் படிப்பில் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். அம்மருத்துவமனைகளில் மருத்துவ சேவை முழுமையாக துவங்கப்படவில்லை. படிப்படியாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'எம்.டி அவசர சிகிச்சை பட்டமேற்படிப்பு தொடங்க நடவடிக்கை..!' - அமைச்சர் மா.சு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் நடப்பாண்டில் சேர்ந்துள்ளனர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிதி ஆதாரத்திற்கு ஏற்ப நிரந்தரம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப செவிலியர்களின் பணி நிலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழையின் பொழுது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மழைக்கால பருவ நோய்கள் வராமல் தடுக்க முகாம்கள் அமைத்து செயல்பட்டது. தற்போது புயல் வந்தாலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை தனியார் மருத்துவமனையில் தீ விபத்து