தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2020, 11:55 PM IST

ETV Bharat / state

'இனி எம்பிபிஎஸ் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்' - துணைவேந்தர் சுதா சேஷய்யன்

சென்னை: எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அதன் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

mbbs-exams-can-now-monitored-through-online-vice-chancellor-sudha-seshayyan
இனி எம்பிபிஎஸ் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணாக்கிப்படும்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுச் செயல்படும் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தேர்வுகளை அப்பல்கலைக்கழகம் நடத்துகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் புதிய முறை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,


'தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுச் செயல்படும் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டுத் தேர்வு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வில் புதிய முறையாக, மாணவர்கள் கல்லூரிகளில் தேர்வு எழுதுவதை ஆன்லைன் மூலம் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து நேரடியாக கண்காணித்து வருகிறோம்.

சிசிடிவில் நேரடி கண்காணிப்பு

கடந்த தேர்வு வரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தேர்வுகள் பதிவுசெய்யப்பட்டு விடைத்தாள்களுடன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தேவைப்பட்டால் பரிசோதனை செய்து முறைகேடு நடந்துள்ளதா என்பதை சரி பார்ப்போம்.

ஆனால் புதிய முறையில் தேர்வு நடக்கும்போதே தேர்வு மையத்தில் நடைபெறும் அனைத்து செயல்களையும் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். தற்போது 35 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு கல்லூரியின் தேர்வு மையம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுதா சேஷய்யன் தேர்வறையில் நேரில் ஆய்வு

பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வில் 12 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

அதனால் ஒரு கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலும், மற்றொரு கல்லூரியின் மாணவர்கள் சென்னையில் வேறொரு கல்லூரியிலும் தேர்வு எழுதி வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதை கண்காணித்தபோது ஒரு தேர்வு மையத்தில் மாணவர் சோர்வாக இருந்ததைக் கண்டறிந்து அவருக்கு உதவுமாறு தெரிவித்தோம். அவரிடம் தேர்வு மையத்தில் அலுவலர்கள் விசாரணை செய்தபோது தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதுபோன்ற முறைகளையும் கண்டறிய முடியும்.

வருங்காலத்தில் மருத்துவமும் அதன் சார்ந்த அனைத்து தொடர்புகளையும் ஆன்லைன் முறையில் கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். 500 தேர்வு மையங்கள் ஆன்லைன் மூலம் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்படும். செயற்கை நுண்ணறிவு முறையில் தேர்வு மையங்களை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம். இதனால் தேர்வில் எந்தவித தவறுகளும் நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்படும்.

எம்பிபிஎஸ் படிப்பில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம்தான் தேர்வு நடைபெறும். எனவே அவர்களைப் பதிவு செய்யும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை காவல்துறையிலும், நீதிமன்றத்திலும் உள்ளதால் அவர்களிடமும் ஆவணங்களை கேட்டுள்ளோம். அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேட்டி

இதையும் படியுங்க:'கவலை வேண்டாம், தேர்வில் ஆல் பாஸ்தான்' - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ABOUT THE AUTHOR

...view details