'இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி மாணவர்கள் தேர்ச்சி' - Indian Medical Council
சென்னை: இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி தியரியில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற இரு மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தருண் ஜெரூசன், சலீல் ராம் ஆகிய இரண்டு பேர் சென்னை உய ர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், புதுச்சேரி பல்கலைக்கழகம் மாணவர்களுடைய தேர்வு மதிப்பெண்ணைக் கணக்கிடுவதில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்றாமல், எம்.பி.பி.எஸ் பாடப்பிரிவில், குழந்தைகள் நலம் பாடத்தில் தியரியில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றதாக கூறி நாங்கள் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவித்தது.
உச்சநீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளில், மருத்துவ கவுன்சில் விதிமுறைகளையே பல்கலைகழகங்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால், தியரியில் 50 விழுக்காடு குறைவாக மதிப்பெண் பெற்ற எங்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், அதனைப் பின்பற்றி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தியரியில் 50 விழுக்காடு குறைவான மதிப்பெண் எடுத்தாலும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி மாணவர்கள் இருவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உத்தரவிட்டார்.