சென்னை : இளநிலை மருத்துவ சேர்க்கையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பொது தரவரிசை 1 முதல் 10 ஆயிரத்து 456 வரை இடம்பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள், அதாவது நீட் மதிப்பெண் 710 முதல் 410 வரை பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்த மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணி வரைக்குள் கலந்தாய்வுக்கான கட்டணம் 500 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு
இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 7ஆம் தேதி மாணவர்கள் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்படுவார்கள். பிப்ரவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். மருத்துவ கல்வி இயக்குநரகம் குறிப்பிடும் மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான முடிவுகள் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. மாணவர்களுக்கு எந்தெந்த கல்லூரி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்ற விவரம் 15ஆம் தேதி தெரிந்துவிடும்.