சென்னை:தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்வினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து, மாணவர்களுடன் தாெலைபேசி மூலம் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்பாேது, ''மனநல ஆலோசனைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021ஆம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் சேவை மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு ஆலோசனை வழங்கத் தொடங்கி வைக்கப்பட்டது. 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
2022ஆம் ஆண்டில் 1100 அழைப்பு மையம் மூலம் 60 மனநல ஆலோசகர்களைக் கொண்டு இச்சேவை விரிவுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் நட்புடன் உங்களோடு மனநல சேவை “14,416” தொடங்கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் 2 மனநல மருத்துவர்களைக் கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 104 மருத்துவ உதவி தகவல் மையம் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கத்தின்படி, இந்தாண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய 1,44,516 பேருக்கு மே மாதம் 18ஆம் தேதி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்மூலம் இதுவரை 54,374 மாணவ மாணவியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 177 மணவ மாணவியர்கள் அதிக மனநல அழுத்தத்தில் (High Risk Students) உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது மாவட்ட அளவில் இருக்கும் மனநல ஆலோசகர்களை அந்த மாணவர்களின் இல்லங்களுக்கு அனுப்பி அவர்களின் மூலமாகவும் நேரடியாக மனக்குறை மற்றும் மன அழுத்தத்தைப் போக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 54 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சிப் பெறாத மாணவர்களின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
அவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அந்த மாணவர்களைத் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். அவர்கள் மதிப்பெண்கள், அவர்களுக்கு அடுத்தடுத்து செய்யப் போகின்ற விஷயங்களை குறித்து ஆலோசித்து மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெற்றோர்களுக்கு இதில் அதிக அளவு மாணவர்களை கடிந்து கொள்ளாமல் இருக்கவும், அவர்களுக்கு கவுன்சிலிங் என்ற வகையில் இந்த சூழலை எடுத்துச் சொல்லி அடுத்தடுத்து இருக்கிற வாய்ப்புகளும் எடுத்துச்சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வு பொறுத்தவரை பெரிய அளவில் தமிழகத்தில் முக்கியத்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது. நீட் தேர்வு முடிவில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த பிரபஞ்சன் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், கௌஸ்தவ் பௌரி, சூர்யா சித்தார்த், வருண் ஆகிய 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
எதிர்காலத்தில் இன்னமும் கூடுதலாக சாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து மாணவ மாணவியர்கள் தங்களுடைய கூடுதலாக படிக்கும் எண்ணத்தை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும், மன அழுத்தத்தைப் போக்கவும் இந்த நிகழ்ச்சியை அதிகாரிகளின் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.