இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மருத்துவக்கல்வி இயக்குநர் எட்வின் ஜோ கூறுகையில், "மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஜூன் 6ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவே நடத்தப்படும். ஜூன் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஜூலை முதல் வாரம் வரை முதல்கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,000 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டு புதியதாக திருநெல்வேலி, மதுரை மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 100 இடங்களும், கரூர் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்களும், ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி அரசு ஏற்றுக்கொள்வதால், அதில் 100 இடங்களும் கூடுதலாக மருத்துவ கலந்தாய்விற்கு கிடைக்கிறது.
மருத்துவக்கல்வி இயக்குநர் எட்வின் ஜோ அதேபோல் தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதத்தில் வழங்கப்படும்" என தெரிவித்தார்.