சென்னை:ஆவடியில் உள்ள திண் ஊர்தி தொழிற்சாலையில் (HVF) பணிப்புரிபவர் வடிவேல். இவரது மனைவி சுவர்ணதாய் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் துறையூரில் நடைப்பெறும் உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்தை புக் செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் புக் செய்த பேருந்தை தவறவிட்டதால், அரசு பேருந்து மூலமாக செல்லலாம் என முடிவு செய்துள்ளனர்.
எனவே, இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து 6-வது நடைமேடையில் துறையூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். அதன் பின், லக்கேஜ் வைக்கும் இடத்தில் அவர்கள் கொண்டு வந்த சிவப்பு நிற பேக்கை வைத்து விட்டு, மனைவி பேருந்தில் இருக்க, வடிவேல் மட்டும் கீழே இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றுள்ளார். பின் அவர் திரும்பி வந்த சிறிது நேரத்திலே லக்கேஜ் கார்டில் வைத்து இருந்த பேக் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின், இது குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில், போலீசார் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிசிடிவி காட்சியில் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்த ஒருவர் சூட்கேசுடன் செல்வது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து மூன்று குழுக்களாக பிரிந்த போலீசார், தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஆட்டோ மூலமாக திருடன் வட பழனி வரை சென்றுள்ளார் என்பதை அறிந்தனர்.
பின் அந்த திருடன் அங்கு சூட்கேசை வீசிவிட்டு உள்ளே இருந்த நகையை எடுத்துக் கொண்டு, வேறு ஒரு ஆட்டோ மூலமாக கிண்டி கத்திபாரா அருகில் சிவகங்கை பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து, அவரை பின் தொடர்ந்த போலீசார் ஒவ்வொரு பேருந்தாக சோதனையிட்டனர். அப்போது பேருந்தில் தான் அணிந்து இருந்த சிவப்பு நிற டீ சர்ட்டை மாற்ற முயன்று கொண்டிருத்தவரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.