பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் நேற்று (11.02.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேயர் பிரியா அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கையினால் இயக்கும் 229 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், கையினால் இயக்கப்படும் 412 கொசுக் கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வாகனங்களில் மூலம் மேற்கொள்ளப்படும் தீவிர கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் பணிகள் மற்றும் கையினால் இயக்கப்படும் கொசு ஒழிப்பு புகைப்பரப்புதல் மற்றும் கொசுக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளை 2 மடங்காக அதிகரித்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கும் நீர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். குறிப்பாக, மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள தண்ணீர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். மழைநீர் வடிகால்களில் கொசு ஒழிப்பு புகைப்பரப்புதல் மற்றும் கொசுப்புழு மருந்து தெளித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.