சென்னை:தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து அன்றைய தினமே அப்புறப்படுத்துதல் மற்றும் தீ விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை மேயர் மு.மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா பேசுகையில், "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை தனியாக அதற்கான வைக்கப்பட்டுள்ள பைகளில் சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் கனரக வாகனங்களை இப்பணிகளுக்காக ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தினந்தோறும் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அன்றைய தினமே சாலை மற்றும் தெருக்களிலிருந்து அப்புறப்படுத்தி, பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பின்னர், இந்தக் கழிவுகள் முறையாக கும்மிடிப்பூண்டியில் உள்ள நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.