மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில்,
"மக்களவை தேர்தலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நடைபெறும் தேர்தலிலும் பாஜக கட்சி ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, உயர் சாதி சார்ந்து பேசுதல், இந்துக்கள் பிரிவினை போன்றவற்றால் தோல்வி அடையும். இப்போது கூட காவலாளி என்று கூறி பாஜகவினர் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அவர்கள் வெற்றி பெற சிறிய அளவு கூட வாய்ப்பு இல்லை.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகள், தலித்துக்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வந்தார். அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. மோடி தன் குறைகளை மறைக்க பொய் கூறி மக்களை திசை திருப்பி வருகிறார். புல்வாமா தாக்குதலில் கூட தேர்தல் பரப்புரையில்தான் இருந்தார். மோடி பெரும் பணக்காரர்களுக்கு காவலாளி. தன் கட்சியின் பிரச்னை குறித்துதான் மோடிக்கு கவலை. நடைபெற்ற பாஜக, காங்கிரஸ் ஆட்சிகளில் தலித்துகளுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இப்போது கூட வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு இல்லை.
சுதந்திரம் அடைந்த நாள் முதல் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தலித்துகளுக்கு எதிராக ஆட்சி செய்து வருகின்றன. இத்தனை ஆண்டுகள் அதை நாம் பொறுத்து கொண்டு இருந்தோம். இந்த தேர்தல் மூலம் பதில் சொல்லுவோம். மத்தியில் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைத்தால் இட ஒதுக்கீடு அனைத்து விதத்திலும் நிறைவேற்றப்படும். மத்திய அரசோடு, தமிழக அரசு கொண்டுள்ள எல்லா பிரச்னைகளுக்கும் முடிவுக்கு கொண்டு வரப்படும்" என்று பேசினார்.