சென்னை:இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு, தானியங்கி வாகனங்கள், ஜவுளி, காலணி மற்றும் தோல் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு என பல்வேறு வகையான தொழில்களை நிறுவிட ஊக்கமளிப்பதன் மூலம் முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கினை விரைவில் அடைவதற்காக, அதிக முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
2024ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்திட உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட்:தரமான கண் சிகிச்சையை எளிதாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு, தெலங்கானா, குஜராத், ஆந்திரப்பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளை அமைத்துள்ள பெரிய வலையமைப்பு கொண்ட குழுமமாகும். இக்குழுமம், தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிசிக்சை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் குழுமம், 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மேக்சிவிஷன் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் ஜி.எஸ்.கே.வேலு, தலைமை செயல் அலுவலர் திரு.வி.எஸ்.சுதீர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!