சென்னை:மாவீரன் பிள்ளை என்ற திரைப்படம் கேஎன்ஆர் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்வு குறித்து கூறும் படம் என்பதால், இதில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார்.
மாவீரன் பிள்ளை திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கேஎன்ஆர் ராஜா, இயக்குநர் பேரரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, ''எனது மகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நானும் அவரது கணவரிடம் பேசிவிட்டு முடிவு எடுக்கச்சொன்னேன். அவரது கணவர் சரி என்ற பின் இப்படத்தில் அவர் நடித்துள்ளார். எனது கணவர் வீரப்பன் தமிழ் தேசியவாதியாக கர்நாடகத்தில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர். வீரப்பன் போல் ஒருவர் தேவை என்பதை தமிழக மக்கள் இப்போது உணர்கின்றனர், அவர் எப்போதும் சாதிக்கு துணை போகாதவர்'' என்றும் கூறினார்.
மேலும் அவர், தற்போதைய படிக்கின்ற இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து உள்ளது என்றும் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதால்தான் இளைஞர்கள் சீரழித்து வருகின்றனர் என்றும் கூறினார். ஒரு சமூக கருத்துள்ள படத்தை எடுத்துவிட்டு அதனை வெளியிட இயக்குநர் எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறார் எனவும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு எந்தமாதிரியான வரவேற்பு கிடைக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.