சென்னை: 'மாவீரன்' திரைப்படம் 60 கோடி ரூபாய் செலவில், நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை மறுதினம் (ஜூலை 14) திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்திற்குத் தடை விதிக்கக்கோரி, இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.
இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஸ்கின் வரக்கூடிய காட்சிகளில் அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக, தங்களது இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதால், அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திய ஜனநாயக கட்சி தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜராகி, சிகப்பு - வெள்ளை - சிகப்பு என்ற வண்ண அடுக்குகளில் உள்ள தங்கள் கட்சியின் கொடியைப் படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும், கொடியாக மட்டுமல்லாமல் படத்தில் வரக்கூடிய கட்சியினர் அணியும் வேஷ்டி மற்றும் துண்டு ஆகியவற்றிலும் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், இப்படத்தில் வரும் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் கட்சியின் கொடி பயன்படுத்தப்படுவதால், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதுடன், பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை விதைப்பதாக அமைந்துவிடும் என்பதால், அந்த வண்ணங்களை மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், அவற்றை மாற்றம் செய்யாமல் படத்தை வெளியிடக் கூடாது என தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வி.வெங்கடேசன் வாதிட்டார்.