கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2019-20 கல்வியாண்டில் பள்ளிகளில் சேர ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இச்சட்டததின் கீழ் இந்த ஆண்டு பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 989 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில்,
"கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பத்தில் தகுதியானவற்றை ஆய்வு செய்து தரம் பிரிக்க வேண்டும். கல்வி தகவல் மேலாண்மை முகமை (இஎம்ஐஎஸ்) இணையத்தளத்தில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணியை வரும் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவால் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்படும். இதில் தவறு ஏதேனும் இருந்தால் சேர்க்கை ரத்து செய்யப்படும். ஆவணங்களை ஆய்வு செய்யும் போது அலுவலர்கள் தவறு ஏதுவுமின்றி கவனமுடன் செயல்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.