சென்னை:தமிழ்நாட்டில் பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் இன்று (பிப்.14) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆதித்யா ராம், அம்பாலால், அசோகா நந்தவனம் மற்றும் ரேடியன்ஸ் ரியாலிட்டி ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கியமாக சென்னை அண்ணாநகர் 6வது அவென்யூவில் உள்ள அசோக் நந்தவன் நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களிலும், கிண்டி, நீலாங்கரை, நந்தனம் ஆகிய பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் பூந்தமல்லியில் உள்ள அசோகா ரெசிடென்சி நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கரோனா ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு இந்த நான்கு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வீடு மற்றும் நில விற்பனையில் வருமானத்தை மறைத்து பணம் ஈட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.